Wednesday, April 24, 2013

முல்லைப் பாட்டு


முல்லைப் பாட்டு

வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் இனிமையை படித்து இன்புற

ஒரு சிறந்த பாட்டு முல்லைப் பாட்டு..

103 வரிகள் கொண்டது முல்லைப் பாட்டு. சிறிது சிறிதாக் நாம் பிரித்து படித்து

இன்புறலாம்..

சங்க இலக்கியப் பாடல்களில் கள்ளுண்ட குரங்காக மனம் மயங்கி கிடப்பதற்கு

காரணம் பாடல்களின் வரிகள் நம் முன் காட்சியாக விரியும்.

அவ்வாறு நான் கண்ட காட்சிகளை உங்களையும் காண அழைக்கிறேன்.

நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த் கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை


இதில் முல்லைத் திணைக்குரிய முதற் பொருளான நிலம் பொழுது
இரண்டையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

பெரும் பொழுது கார்காலம்
சிறு பொழுது மாலை.

முல்லைத் திணை விளக்கம் 

திருமால், அகன்ற இடம் பொருந்திய உலகததை வளைத்துச் சக்கரமும் சங்கும்
ஆகிய குறிகளாஇ யுடையனவும் திருமகளை அணைத்தனவுமான வலிய
கையை உடையவன். மாவலி மன்னன் வார்த்த நீர் தன் கையில் விழுந்த அளவில் வானில் உயர்ந்து வளர்ந்தவன். அத்திருமாலைப் போல் ஒலிக்கும்
குளிர்ந்த கடலினை நீரைக் குடித்து,வலமாய் எழுந்து மலைகளில் தங்கிப்
பின்பு உலகத்தை வளைத்துக் கொண்டு எழுந்த விரைந்து எழும் செலவையுடைய பெருமழை பெய்த பிரிந்தவர்ககுத் துன்பத்தைத் தரும்
புல்லிய மாலைக் காலம்.

நனந் தலை உலகம் - அகன்ற இடத்தை உடைய உலகம்

வளைஇ - வளைத்து

நேமி - சக்கரம்

வலம்புரிசங்கு - வலப்பக்கச் சுற்றுகளையுடைய சங்கு.

பொறித்த - சக்கு சக்கரம் பொறித்தது போன்ற குறிகளைக் கொண்ட
சிறந்த உடல் இலக்கணம்.

தடக்கை - பெரிய என்னும் பொருளது.

நீர் செல நிமிர்ந்த மாஅல் - மாவலி மன்னனிடம் மூவடி மண் கேட்க,
மாவலி இசைந்து நீர் வார்த்த போது, கையில் விழுந்த் போது,அவன்
பெருவடிவு கொண்டு எழுந்து உயர்ந்து இவ்வுலகத்து ஓரடியில் அளந்தற்காக
பெருவடிவு கொண்டான் ஆதலால் நிமிர்ந்த மால்.

வளைஇ - வளைய என்ற பொருள் கொண்டு,உலகத்தை வளைத்து அளத்தற்காக நிமிர்ந்த திருமால் போல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாஅல் - மால் திருமால்

பாடு இமிழ் - ஒலி முழங்கும்

பனிக்கடல் - குளிர்ந்த கடல்

பருகி - குடித்து

வலன் ஏர்பு - வலப்பக்கமாக எழுந்து

கோடு கொண்டு - மலைகளை இருப்பிடமாகக் கொண்டு

கொடுஞ்செலவு - விரைந்த செலவு

எழிலி - மேகம்

பெரும்பெயல் - பெரும் மழை

சிறுபுன்மாலை - சிறு பொழுதான பொலிவற்ற மாலைப் போது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை...

மேலும் தொடர வாழ்த்துக்கள்...

virudhaimalar said...

நன்றி திரு.தனபாலன் அவர்களே..